Friday, 29 December 2017

அப்பா.... என் முதல் எழுத்துக்கள்

அப்பா,

ஆண்டுகள் பல கடந்துவிட்டன , ஆசையாய் இந்த வார்த்தையை உச்சரித்து....

நீ இல்லாமல் வாழ பழகி ஈரைந்து வருடங்கள் ஆகி விட்டது...

உருவத்தில் உன்னை ஒத்தவனாம் நான், ஒப்பிட்டு பார்க்க தான் இல்லை ஓர் புகைப்படம்...

ஆசையாக தான் இருக்கிறது, கோவத்திலும் என்னை கொஞ்சும் நேரத்திலும் உன் குரல் எப்படி இருக்கும் என்று கேட்க... அனால் நினைத்து பார்க்க கூட நினைவில் இல்லை உன் குரல்......

ஒரு மகனாய் நான் எதிர்பார்த்த ஆசைகள் ஏராளம்,
உன் சுண்டு விரல் பிடித்து ஊர் சுற்ற,
உறக்கமில்லா இரவுகளில் ஒருக்களித்து உன்மீது ஒரு கால் போட்டு தூங்க,
இவை அற்பமாய் இருந்தாலும் அதை கூட அனுபவிக்க இயலவில்லை....

அப்பா நீ இல்லாவிட்டாலும், அடையாளமாய் உன் பெயர் என் பெயரோடு என்றும்..........

நீ விட்டு சென்ற விழுது இன்று வேர் ஊன்ற துவங்கி விட்டது, இதை கண்டு கழிக்க நீயும் இல்லை, கொண்டாடி மகிழ நானும் விரும்பவில்லை....

உனக்கு மறு ஜென்மம் வேண்டுமென்றால் மீண்டும் வா இந்த மண்ணுலகிற்கு என் மகனாய்.........

காத்திருக்கிறேன் தந்தையாகும் தருணம் வேண்டி....

-இவண்
அதியமான் அண்ணாதுரை

Sunday, 3 December 2017

அமைதியின் அடையாளம்

மரணம்....

தாய்மடி தவழ்ந்தவர்களை மண் தழுவும் நிகழ்வு...

ஆரவாரத்திலும் அய்யோ எனும் ஓலத்திலும் என்னே அமைதியான தூக்கம்...

வாழ்ந்த வரை கஞ்சனனாலும் ஆயிரம் புழுக்கள் புசிக்க உயிர் நீத்து உடலை உணவாய் தந்த வள்ளள் நீ...

அடடே, தூரத்து சொந்தம் கூட நேரத்துக்கு வந்து விட்டார்கள், ஆவலோடு உன்னை வழியனுப்ப...

உச்சந்தலையில் உறவினர்கள் வைத்த எண்ணெய் வழிய, அதைக் காண்பாவர்களின் கண்ணீர் வழிய, என்னே ஒரு ஆந்த குளியல்...

தேம்பி அழும் உன் குடும்பத்தை தவிற தேநீரையே தேடுகின்றன பல கண்கள்...

அடக்கொடுமையே நெற்றியில் ஒட்டிய ஒத்த ரூபாய்க்கா ஓயாது உழைத்தாய்...

அழுது மனம் மாற்றப் போராடுகிறார்கள் கட்டியவளும் பெற்றவர்களும், கருணை இல்லையா உனக்கு, ஓ!!! காதையும் கட்டி விட்டார்களோ....

சரி, அலங்காரம் முடிந்தது... அடுத்த பயனத்திற்கு பவனி போக வண்டியும் தயார், வழிப்போக்கர்களும் தயார்...

கட்டிய வேட்டியும், ஒட்டிய காசயும் கூட விட்டு வைக்களேயே இந்த வெட்டியான்...

இழந்தது உயிரை மட்டுமல்ல, செய்த பாவம், சேர்த்த பணம், கொண்ட கோபம்... உன் திருமேனி போல நீயும் தூய்மையே, துயில் கொள் உனக்கான ஆறடியில்...

எண்ணத்தின் சாரல்

கரை மீது கடல் கொண்ட காதல் அவ்வப்போது அரவணைத்து திரும்பும் அலை சொல்லும் நுரை வடிவில்....!

=================================

காலம் தோறும் சுற்றி வந்தும் புரியவில்லையோ....
நேரத்தின் மீது நெடிமுள் கொண்ட காதலை....!

=================================

தரிசு நிலமும் தாய்மை அடைந்தது....
காக்கை விதைத்த கருவேலம் விருட்சம் பெற்ற போது...!!

=================================

கார்மேகத்தை கலைத்த காற்று...

நீலமேகம் நீ கலங்குவாய் என்றோ...!!!

அல்ல...

மண் மீது தான் கொண்ட காதலை, மழையாய் நீ நனைப்பாய் என்றோ...!!!

=================================

கூரை நெய்ய  குச்சி எடுத்துச் செல்லும் குருவியைக் கண்டு இரைக்காக சிறையில் வாழும் கூண்டு கிளிக்கு பரிதாபம்.

=================================

என் வருங்கால மகளுக்கு...

நெற்றி வியர்வை நிலத்தை முத்தமிட...
நண்பகலிலும் நாளமெல்லாம் ஓர் நடுக்கம்...

என் ஐம்புலனில் ஒன்று மட்டும் ஓர் ஓசை கேட்டு, கண்ணீருக்கு கதவைத் திறக்க கண்ணுக்கு கட்டளையிட்டது...

ஆம், அப்பா என அழைக்கத் தெறியாமல் அழுகையால் அவள் வருகையை சொல்கிறாள் என் மகள்....

நடுக்கத்தை விடுத்து நடை போடத் துவங்கின கால்கள்...

கருப்போ சிவப்போ என காண துடித்த கண்களின் கண்ணீரை கைக்குட்டை குடிக்க ...

அள்ளி ஆரத்தழுவ ஆயத்தமாயின கைகள்...

ஈரைந்து மாதத்தின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பும் ஒரு சேர இரு விழியில்...

என் இமைக்கும் இரு நாளிகை பொது விடுமுறை, இமைக்காமல் இருக்க...

கட்டியவளோ கண் மூடி இருக்கிறாள்,
ஆனந்த களிப்போ , ஆணவச் செருக்கோ, எதுவாயினும் என்னவளின் துயில் களைக்க எள்ளளவும் எண்ணமில்லை, இருப்பினும் என் வருகையறிந்து கடைக்கண் காலலளவு திறந்து மூடியது. அவள் கருவிழியில் என் பிம்பம் பதிந்ததா என தெரியவில்லை, ஆனால் என் கண் இடறி அவள் கண்ணம் விழுந்த கண்ணீர் சொல்லியிருக்கும்.

என் மகள், ஒள்ளியாய் ஒருவித சிகப்பில் ஒருக்களித்து படுத்திருக்கிறாள், தாயிடம் இருந்து பிரிந்த சோகமோ, தாமதமாயாய் காண வந்த தந்தையின் மீது கோபமோ, தொப்புளை அறுத்து தொட்டிலில் போட்ட வருத்தமோ, காரணத்தை விடுத்து மறுபுறம் சென்று மகளைக் கண்டேன். அவள் சிறு விழியால் புருவம் சுளித்து எனைப் பார்த்த நொடி, மதி மயங்கி நானும் மழலையானேன்.

கசக்காத காதல் தோல்வி

நீரின்றி அமையாது உலகு என்பதால் தானோ, நீயின்றி (கண்)நீரைத் தந்து சென்றாய் என் உலகில்...

உன் நினைவால் வடியும் கண்ணீரை காற்றாய் வந்து காய வைத்தது நீ தானடி, இந்த காற்றும் காதல் தானடி...

நிகழ்காலத்தில் என் பயணம் நெடுகும் உன் நினைவும், என் நிழலும். முடிந்தால் எதிர்காலத்திற்கும் எடுத்துரைத்து போடி , உன் நினைவுகளை நீங்க செய்ய...

அமிழ்தமொழி அவள் விழி, அதுவும் அமிலமுமிழ்ந்து போனதேனடி...

என் எண்ணத்தில் உருவாய் நீ, எழுத்தில் கருவாய் நீ... என் காதலின் ஆதியும் நீ, என்னில் பாதியும் நீ...

கானலாய் உன் உருவம், என் கற்பனையின் தாகம் தீர்க்கும்...

காமமில்லா காதல் தோழமை என்றால், நீ என் தோழி. காலத்தை மிஞ்சிய தோழமை காதல் என்றால், நீ என் காதலி...

இணையாததால் இது தோல்வி அல்ல, தடம் மாறாதிருக்க தண்டவாளம் பிரிந்திருப்பது போல... நானும் நீயும்...

நினைவோடு நிழலாடும் வரை நீயே என் பொன்வசந்தம்...

இனி நமக்காக நாமுமில்லை,  நாளுமில்லை.. பிரிதலில் உள்ள புரிதலோடு.

இவண்,
அதியமான் அண்ணாதுரை

கற்பனைக் காதல்

ஒப்பணையும் ஓர் அழகு,

உன் கண்ணக்குழியில் இடறி விழுந்த கூந்தலை கோதி செருகும் பொழுது...

கம்பனும் கண்டிடாத கவிப்பாட்டு எண்ணவளின் கால் கொளுசு மெட்டு...

காலை கதிரவனும் காத்திருக்கும் உன் முகம் கண்டு பிரகாசிக்க...

உற்று பார்க்காதே, வெண்ணிலவும் வளர்பிறயை மறக்கக்கூடும்...

கார் மேகத்தையும் களவாடுவேன், உன் விழியின் வீரியத்தை குறைக்க...

பொய் என தெரிந்தும் புன்னகை பூக்கும் இதழ்களுக்காக இன்னமும் உரைப்பேன் ஓராயிரம், ஒன்றிரண்டு உண்மையும் கலந்து....

உயிர் நீத்த பட்டு பூச்சிகள் மோட்சம் பெற்றன, புடவையாய் அது உன் பொன்மேனி அலங்கரிக்க கண்டு...

வனவாசம் செல்லவும் தயங்க மாட்டேன். என்னை ராமனாக மாற்றிய சீதை நீ வழித்துணையாய் வருவதென்றால்...

தென்றலையும் திட்டித் தீர்த்து விட்டேன், எனைத் தான்டி உனைத் தீண்டிய குற்றத்திற்காக...

அவள்... என்னவள்?

யார் அவள்,

நேற்று வரை அடையாளமில்லை, இன்றோ அடைமொழியாய் என் பெயர் அவள் பெயரோடு...

அனைத்தும் புதிது, இடமும் இங்குள்ள ஆட்களும், இருந்தும் என்ன ஒரு தைரியம். இது தன்னம்பிக்கையா, இல்லை என் மீது கொண்ட நம்பிக்கையா...

இருந்தும் தழும்பிய கண்ணீரில் பிறந்த வீட்டை பிரிந்த பரிதவிப்பு. இதற்கு ஆறுதலாய் நான் என்ன சொல்ல, அரவணைப்பைத் தவிர...

என் எதிர்காலத்தின் இலக்கணம் நீ, நான் கவியானால் அதில் எதுகையும் நீ, மோனையும் நீ.

உன் வழி நெடுக, நிழலை தான்டியும் நெருக்கமாய் நான்...

பயனத்தில் பதிந்த பாதசுவட்டை எல்லாம் நம் நினைவால் நிரப்ப வேண்டும், அதற்கு நீ வேண்டும் என் அருகில்...

என் வார்த்தையின் வண்ணம், உன் கருப்பு வெள்ளை கண்களில்...

நீள வானம் நீ எனில், நீல மேகமாய் நான் என்றும் உன்னைச் சுற்றி...

கணவனே கண் கண்ட தெய்வம்...
கருவைத் தந்தவன் நானாயினும், அதற்கு உருவைத் தந்தவள் நீயல்லவோ.. நான் கண்ட தெய்வம் நீ...

பிறப்பது ஆணாயினும் பெண்ணாயினும் அது நம் அன்பின் அடையாளம், மாறாது என்னாளும்...

எனக்கு சிறகுமில்லை, நான் இறகுமில்லை, இருந்தும் பறக்கிறேன் நீ பார்த்த நொடி முதல்...

கையிலிட்ட மருதாணிக்கு உன் கண்ணம் ஏன் சிவந்தது...

எனைக் கண்டதும்...

வெட்கத்தின் வெளிப்பாடோ!
பெண்மையின் பன்பாடோ!!

உன்னைக் கண்ட நொடி முதல் அசைவின்றி இருக்கும் என்னிடம் எதைப் பறிக்க பட்டுத் திரும்புகிறது  என்மீது உன் கடைக்கண் பார்வை.

ஆதியும் நானானால் , என்னில் பாதி நீயாவாய்...

நார்த்தீகம்

என் கண்களுக்கு கோயிலும் கடவுளும்...

கடவுளின் சிலை, கல்லிற்கு உளி கொண்டு உயிர் வடித்த கலைஞனின் கலை...

ஆலயம், ஆயிரம் உயிரை களவாடிய கடவுளுக்கு கட்டப்பட்ட சிறை...

நல்லோரை தன்வசம் இறப்பால் ஈர்த்த சுயநலவாதி...

காணிக்கையின் அளவைக் கொண்டு ஆசி வழங்கும் அரசியல்வாதி.

ஆழ்மனதின் நம்பிக்கையே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை அறிவியலாய் சொன்னால் புரியாது, ஆதலால் ஆண்டவன்(ஐ) உருவானான். இதைப் புரியாத மூடர்களுக்கு நான் மூடன்.

நமக்கு, வெற்றி எப்போதும் அவரவர் கடின உழைப்பின் சாதனை, தோல்வி மட்டும் ஆண்டவன் சோதனை...

மக்களின் குறைகளை அந்த மகேசனால் தீர்க்க முடியாது. காரணம் கருவறையில் இருப்பவனுக்கு கவலைகள் எங்ஙனம் விளங்கும்...

(தொடரும்)

பணத்தின் பலம்

பணம்...

இளமையில் இல்லை என ஏங்காத நாளில்லை, இருந்தும் இன்பத்திற்கு பஞ்சமில்லை குடும்பத்தில்...

உருண்டோடிய வாழ்க்கையில் கிடைத்ததை கொண்டு இருப்பதை உண்டு பெற்றோம் பட்டத்தை...

நிறுவனங்கள் நிராகரித்த பொழுது, எதை எண்ணுவது என்ற குழப்பம்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவது எனவா... கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு எனவா... இரண்டாம் வாக்கு என்றோ பொய்த்திருக்க கூடும்...

தமிழே தலை சிறந்தது என்றது என் குலம்...
ஆனால் அலுவலகத்திற்கு அறிவின் அளவீடாய் ஆங்கிலம்...

தமிழ் மாநிலத்தில் வேலையில்லை. அண்டை மாநிலத்தில் பணி புரிய ஆரிய மொழி தெரியவில்லை...

கால ஒட்டத்தில் ஒருவழியாய் ஒதுங்க ஓர் இடம்... எதிர்பார்த்த பணம் இன்று பையில் உள்ளது... இதை தேடி ஓடிய வேளையில் தொலைந்து போன சொந்தம் எங்கே உள்ளது...

ஒட்டுக் குடித்தனமோ கூட்டுக் குடித்தனமோ... ஒன்றாய் உண்டு ஓட்(டை)டு வீட்டில் உறங்கிய சுகம், இன்று இல்லை அடுக்குமாடியில் ...

பல்லுப் போன சீப்பு, பாதரசம் போன கண்ணாடி, சுருக்கமான சட்டை அனைத்தையும் பணம் மாற்றியது.

ஆசைப் பட்ட அனைத்தும் கண் முன் இருந்தும் , எண்ணத்தில் இறந்த காலத்தின் இனிமையே நிறைந்திருக்கிறது.

இந்த சுயநலத் தீயில் நானும் ஓர் சுடர்.. பணத்திற்காக வேஷம் பூண்டேன், பாசம் பொய்த்தது.

எனை நானே தேடிப் பார்க்கிறேன் காணும் கண்ணாடியில் எல்லாம், ஆடம்பரத்தின் பிரதிபலிப்பாய் என் பிம்பம்,  எங்கே நான்?

இவண்,
அதியமான் அண்ணாதுரை

தேடலின் வலி

வாழ்க்கை,

என்றுமே ஒரு எதிர்பார்ப்பை உள்ளடக்கியது, அதற்கு ஏமாற்றமே பெரும்பாலும் விடையானது.

இங்கு சாதுர்யத்தை விட சாணக்கிய குணமை அறிவாக போற்றப்படும்...

ஐந்து பக்க குறிப்போடு அலுவலகம் தோறும் ஏறி எனக்கான விலையை நானே கூறும் நகரவாசி(வேசி)களில் நானும் ஒருவன்.

ஆடை அலங்காரமும் ஆங்கில ஆற்றலுமே ஒருவனின் அறிவு என்றானதால் பகுத்தறிவும் மனிதாபிமானமும் மிதிபட்டு போனது.

(தொடரும்)...

கல்லூரிக் காலம்

முதல் பார்வையில் எள்ளளவும் எண்ணமில்லை அவள் என்னவள் என்று...

நொடிக்கொருமுறை மூடித் திறக்கும் இமையும் இசையவில்லை அவளின் இருக்கை நோக்கி...

உரையாடிய ஒரு கனம் உள்ளத்தின் ஓரத்திலும் ஓர் கணம்...

உச்சரித்த வார்த்தை ஒன்றும் புதிதல்ல, இருந்தும் செவி சாய்ந்தன, அவள் இதழ் இடறி விழும் வார்த்தையை வாங்க...

விலகிச் செல்கையில் கருவிழி இரண்டும் கடைக்கண் வந்து எணைக் காண்பதறிந்து கால்களும் நின்றது நீ கடக்க...

நன்றாக என் நாவிற்கு பழக்கப்பட்ட வார்த்தை "காதல்", அதை உன்னிடம் உரைக்கும் பொழுது ஏணோ உளறி கொட்டியது...

கண்ட நாள் முதல் கொண்ட நியாபகம் அனைத்தும் நினைவாய் நீங்காமல்...

எப்படி உரைக்க மணம் வந்தது ஊதாரி என்று, காலம் கடந்தும் நினைவை சேமித்து வைத்திருக்கும் என்னைப் பார்த்து...

அப்பா...

மதுவின் மடியில் மயங்கச் செய்த காலனின் காதல் கட்டியவளையும் வென்றதோ,

களவாடியவன் காலன் என்றறியாது ஏனைய கடவுளிடம் ஏகப்பட்ட முறையீடு...

என்ன பயன், அர்ச்சகரின் தட்டில் காணிக்கை விழாததால் கடவுளின் செவிகளுக்கு செல்லவில்லை போலும் என் வேண்டுதல்....

உலகத்தின் இரு விழிக்கு உன் உருவம் ஊமையானதால் நீ இறந்தாய் என அர்த்தமில்லை.
உன் பிம்பத்தின் பிரதிபலிப்பு நான்.... 

என் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு உதடும் உன்னையும் ஒரு முறை அழைக்கும்...

முகம் கண்டதும் உன் மகன் என பிறர் மும்மொழிகையில் வரும் ஆனந்தம் அளப்பரியது...

உலகத்தின் மீதான என் புரிதலுக்கு உன் பிரிதல் ஓர் முக்கிய காரணி. அதற்கான நன்றிகளோடு உன் நினைவில், உன் வடிவில்,

இவண்,
அதியமான் அண்ணாதுரை

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம். அவை வி...