Sunday, 3 December 2017

பணத்தின் பலம்

பணம்...

இளமையில் இல்லை என ஏங்காத நாளில்லை, இருந்தும் இன்பத்திற்கு பஞ்சமில்லை குடும்பத்தில்...

உருண்டோடிய வாழ்க்கையில் கிடைத்ததை கொண்டு இருப்பதை உண்டு பெற்றோம் பட்டத்தை...

நிறுவனங்கள் நிராகரித்த பொழுது, எதை எண்ணுவது என்ற குழப்பம்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவது எனவா... கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு எனவா... இரண்டாம் வாக்கு என்றோ பொய்த்திருக்க கூடும்...

தமிழே தலை சிறந்தது என்றது என் குலம்...
ஆனால் அலுவலகத்திற்கு அறிவின் அளவீடாய் ஆங்கிலம்...

தமிழ் மாநிலத்தில் வேலையில்லை. அண்டை மாநிலத்தில் பணி புரிய ஆரிய மொழி தெரியவில்லை...

கால ஒட்டத்தில் ஒருவழியாய் ஒதுங்க ஓர் இடம்... எதிர்பார்த்த பணம் இன்று பையில் உள்ளது... இதை தேடி ஓடிய வேளையில் தொலைந்து போன சொந்தம் எங்கே உள்ளது...

ஒட்டுக் குடித்தனமோ கூட்டுக் குடித்தனமோ... ஒன்றாய் உண்டு ஓட்(டை)டு வீட்டில் உறங்கிய சுகம், இன்று இல்லை அடுக்குமாடியில் ...

பல்லுப் போன சீப்பு, பாதரசம் போன கண்ணாடி, சுருக்கமான சட்டை அனைத்தையும் பணம் மாற்றியது.

ஆசைப் பட்ட அனைத்தும் கண் முன் இருந்தும் , எண்ணத்தில் இறந்த காலத்தின் இனிமையே நிறைந்திருக்கிறது.

இந்த சுயநலத் தீயில் நானும் ஓர் சுடர்.. பணத்திற்காக வேஷம் பூண்டேன், பாசம் பொய்த்தது.

எனை நானே தேடிப் பார்க்கிறேன் காணும் கண்ணாடியில் எல்லாம், ஆடம்பரத்தின் பிரதிபலிப்பாய் என் பிம்பம்,  எங்கே நான்?

இவண்,
அதியமான் அண்ணாதுரை

No comments:

Post a Comment

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம். அவை வி...