Sunday, 15 April 2018

நான் மற்றும் நான்...

தனிமையின் பால் தகை கொண்டேன். அங்கு நானும் நான் விரும்பிய நானும் மட்டும் நாழிகை பாராது நகைபாடி நடைபோட்டோம்..

பரந்த உலகம் கண்முன் இருந்தும் பார்வையில் தழும்பிய தனிமை தவிர்க்க நான் வந்தேன் எனை அணைக்க.

ஒவ்வொரு உரையாடலிலும் ஒரே முகம், அது என் முகம். முன் கண்ணாடி இல்லை, இருந்தும் எப்படி என் முகம். அம்முகம் சுளியவில்லை என் உளறல்களுக்கு. ஏன்... ஏன் எனில் அது நான் விரும்பிய நான்.

இலவச இணைப்பாய் எங்கு சென்றாலும் உடன் வருகிறது நான். ஏன்... ஏன் எனில் என் உரையாடலில் உளறல்களும், உள்ளக்குமுறல்களும் அதிகம். அதை நான் விரும்பிய நான் கேட்பான் சற்றும் சளைக்காமல்.

இந்த நாடோடிக் கூட்டத்தோடு நானும் ஒருவன் என நடிக்க பலமுறை கொன்றிருக்கிறேன் நான் விரும்பிய நானை. இருந்தும் அவன் எனை பிரம்மனாக்கி பிறப்பெடுப்பான் மீண்டும் மீண்டும்.

எதிர்பார்ப்பில்லா ஒருவன் என் பிம்பத்தில் எனக்காய் நான் படைத்த நான் விரும்பிய நான்.  பிம்பம் ஒன்றெனினும், அவன் என் பிரதிபலிப்பல்ல, நான் அழுதால் தேற்றுவான், சிரித்தால் போற்றுவான்.

நான் பழகியதில் நடிக்கப் பழகாத ஒருவன் நான் விரும்பிய நான்.

                                 நானும் விரும்பிய நானும்,
                               அதியமான் அண்ணாதுரை

1 comment:

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம். அவை வி...