நீங்கா நினைவுகள்....
தாயைப் போல் தாலாட்டவில்லை, பாலூட்டவில்லை. இருந்தும் எப்படி உருவானது இந்நேசம். கருவோடு கலந்தாயோ...
வாயுறைக்க மறுத்த வார்த்தையெல்லாம் நாட்குறிப்பில் கொட்டித் தீர்த்தாயோ, நாளை நான் படிப்பேன் என்று...
தெரு முக்கில் நீ வருவதறிந்தால் முன்டியடித்து உனைத் தொட உடன்பிறந்தவளோடு ஒரு போட்டி, வெற்றி எனதறிந்தும்...
நீ வாங்கி வரும் பண்டத்தை புசிக்க, பசியில்லை எனக்கூறி வாசலைப் பார்த்த காலமும் உன்டு. உறங்கிப்போனாலும் நீ ஊட்டிவிடும் பொழுது அரைப்பதத்தில் அசை போட்ட காலம் ஏக உண்டு...
அலுவலகம் செல்கையில் நீ கொடுக்கும் ஒற்றை ருபாய்,
சவரம் செய்யாத முகம், கருப்பு தேகம், சாயம் போன உள் பனியன், முதல் இரண்டு பொத்தானுக்கு என்றுமே விடுமுறை விட்ட கோடு போட்ட அரைக்கை சட்டை, பொடனியில் கொட்டித் தீர்த்த கோகுல் சாண்டில் பவுடர், தேய்ந்த தோள் செருப்பு, நடக்கும் பொழுதெல்லாம் உன்னோடு ஓடிய டைட்டன் கடிகாரம், சிவப்பில் ஒன்று, நீலத்தில் ஒன்றென நின்றிருக்கும் ரெனால்ட்ஸ் பேனா, இன்னும் ஏராள நினைவுகள் என்னுள்ளே உனைப் பற்றி...
சர்க்கரை நீருக்கும் நிக்காத விக்கலைக் கண்டு, காலையில நினைக்குறது எவனோன்னு நான் நினைச்சா, எமனோன்னு புரிய எட்டு நாள் ஆச்சுதப்பா.
காணிக்கைய வாங்கிட்டு கடவுள் வரம் கொடுக்கலையே, காப்பாத்த கடவுள் ஒன்னும் டாக்டருக்கு படிக்கலையே...
வெள்ளிக்கிழமை காலையில விடிஞ்ச வீதி பாக்கையில விவரம் எனக்கு புரிஞ்சு போச்சு. உன் விதியும் இப்போ முடிஞ்சு போச்சு.. வாசலுல நான் வர, அப்பன பாரு, அப்பன பாருனு அத்தைமாரு அழைக்கையில, ஆண்டு பத்து பாத்த உனக்கு அறிமுகம் எதுக்குன்னு கிட்ட வந்து பாக்கையில, கிறுகிறுன்னு வருவதேனோ.. கடைசியா உனை பாக்க கண்ணீர் வ(வி)ழி மறுப்பதேனோ.....
மறுமொழியில்லா உன்னிடத்தில் மகனின் கடைசி வார்த்தை "அப்பா"...
அப்பா.... உன் தோள் அமர்ந்து அண்டத்த பார்த்ததில்ல, ஆசையா நீ பேசி அதிகமா கேட்டதில்ல, ஒன்னா சேர்ந்து ஒரு சினிமா பார்த்ததில்ல. ஊருபட்ட ஆசையெல்லாம் உன்னோட புதைய கண்டு புள்ள மனம் குமுறுதப்பா.
சுயநினைவிழந்து, சுற்றத்து உறவுகளையும் மறந்து, என் வயதில் எதிரே வந்த ஏதோ ஒரு சிறுவனை என் பெயரிட்டு அழைத்தாயே, இது ஒன்று போதாதா உனதன்பை எடுத்துரைக்க...
உனதன்பிற்கும், உன்மீது கொண்ட எனதன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ். உண்மையான அன்பிற்கு உருவமெதற்கு உவமையாக நான் இருக்க...
அண்டத்தில் உள்ள ஆயிரம் நட்சத்திரத்தில் நீயும் ஒருவனனால் அண்ணாந்து பார்ப்பதில் சிரமமில்லை எனக்கு...
அவ்வப்போது கற்பனைக் கடலில் மூழ்கி அப்பா உனைத்தேடும்,
அதியமான் அண்ணாதுரை
Appa irunthum enaku illa .. but na atha ninachu feel Pannathu illa ne ezhuthunatha Kavitha padicha enakum ipadi appa irunthurukalamonu thonuthu..
ReplyDelete