Tuesday, 19 March 2019

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம்.
அவை விடுமுறையை வெறுத்த காலம், அலங்காரம் ஆணுக்கும் உண்டென அறிந்த காலம்...

நிசப்தமான நேரத்தில் நின்னை கான நிரப்பாத தாளோடு காத்திருந்தேன் தேர்வறையில் அந்நாளில்.  இன்று உரைநடையாய் தெரிகிறது உன்னோடு நடைபோட்ட அந்நாட்கள்.

ஆண்டொன்று ஆனபின் அலைபேசியின் அத்தியாயத்தில் குலசாமியாய் தெரிந்தது குறுந்தகவல். அது இலவசம் ஆனதும், காலப்போக்கில் அது அவள் வசம் ஆனதும் காலத்தின் ஜாலம்.

இலக்கணம் பேசிய இரு விழிகளுக்கு உரையாடலெல்லாம் உருவகமானது. அவள் உவமைக்காகவே என் அகராதியும் பெரிதானது.

விடைபெறும் வேளையில் வினா போடும் என் ஏக்கத்திற்கு உன் கடை விழிப்பார்வை விடை.

பாவையரின் மத்தியிலும் பாதரசம் அவள் விழி. அவள் பார்வை படும் இடமெல்லாம் பதிந்த என் காலடி, அது காதலடி.

என் காதல் கடலில் ஆர்ப்பரித்த அலைகளில் காம நுரையில்லை, ஆதலால் கரையில் கறையில்லை...

மறுக்கப்பட்ட காதலின் மறுபெயர் நட்பானது. மாதங்கள் செல்லச் செல்ல மறுசுழற்சி, அது மனக் கிளர்ச்சி. ஓயாத உரையாடலில் ஒருமுறையேனும் உதிராத அவ்வார்த்தைகள். கட்டுப்பாடோ, வார்த்தை தட்டுப்பாடோ அவளே அறிவாள்.

இன்று அவளைப் போலவே அழகாய் தெரிகிறது அச்சிடப்பட்ட அவள் பெயர் அழைப்பிதழில்.

காதலில் கடைசியில் பொய்யாக பூத்த புன்னகையில் அழகில்லை.

இனி கனவுக்கு பழக்க வேண்டும், நடைபோட நான் மட்டுமே உள்ளேன் என...
கற்பனைக்கு பழக்க வேண்டும், எழும் வினாக்களுக்கு என்னிடம் விடையில்லையென...

மாலையில் பூத்து அவள் மாலையில் மறுபடி பூத்த பூக்களும், மஞ்சள் குளித்த மாங்கல்யமும் அவள் அழகுக்கு அழகு சேர்த்தது.

பெற்றோரின் பேரின்ப அலை, அவளை கணவரின்பால் கரை சேர்க்கிறது.

நாவினிற்கும் நன்னீரும் நாளடைவில் கடல் சேரும்.

என் சிந்தனை சிறையின் ஆயுள் கைதிக்காக இவ்வரிகளோடும், கசக்காத காதலோடும், நிதர்சனத்தின் நிலையறிந்து நினைவுகளை மட்டும் களவாடி புன்னகையோடு விடைபெற்ற...

அதியமான் அண்ணாதுரை

No comments:

Post a Comment

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம். அவை வி...